My Focus on astrology is how the planets are inducing its effects on people through gravity and light.,

6ம் பாவகமும், பாவ கிரகங்களும்

6ம் பாவகத்தின் மேலான ஆதிபத்திய காரகத்துவங்கள் கடன், நோய், வம்பு, வழக்கு, எதிரி, விபத்து, எதிரியின் பணம், வேலை, மாமன், விவாகரத்து, அசிங்கம், அவமானம், ஷேர் மார்க்கெட், ரம்மி ..etc

மேலே குறிப்பிட்ட ஆதிபத்திய காரகத்துவங்கள் எல்லாமே ஒரு ஜாதகருக்கு வரும் என்ற அவசியம் இல்லை ஆனால் ஜாதகத்திற்கு ஏற்ப நிச்சயம் ஏதேனும் ஒன்றிலிருந்து இரண்டு வரும், அது எது என்பதை கண்டறிவது 6ம் பாவகத்தின் சூட்சமமாகும் மற்றும் ஜோதிடரின் ஜோதிட ஞானம்.
உதாரணத்திற்கு 1 அல்லது 2 ஆதிபத்திய அமைப்புகளை குறிப்பிடுகிறேன்..

எல்லா விதிகளையும் விதிவிலக்குகளையும் ஒரு கட்டுரையில் கூறி விட முடியாது என்பதை புரிந்து கொண்டு, கீழே கொடுக்கப்படும் அமைப்புகளை புரிந்து கொள்ளுங்கள். 6ம் வீட்டின் ஒவ்வொரு ஆதிபத்தியத்திற்கும் ஒவ்வொரு விதமான காம்பினேஷன்களுடன் அமைப்புகள் இருக்கும்.

லக்னாதிபதி வலுவாகி, தனயோகம் இல்லாமல், குருவளையம் கெட்டு, பணபரஸ்தானம் கெட்டு, 6ம் வீட்டில் தனித்து பாவ கிரகங்கள் ஏதேனும் இருந்தாலும் நிச்சயம் கடன், விவாகரத்து அமைப்புகளை தந்தே தீரும், இதற்கு 6ம் அதிபதியின் தசை வர வேண்டும் என்ற அவசியம் இல்லை 6ம் அதிபதியின் புக்தியே போதுமானது. இது ஆதித்யா குருஜி அவர்கள் சொன்ன 6ம் வீட்டில் தனித்து பாவ கிரகங்கள் எந்த தொடர்பும் இன்றி அமரும் பொழுது 6ம் வீட்டை கெடுத்து பலன் தருவார் என்ற பலனுக்கு விதிவிலக்காக அமையும்..

6ம் அதிபதியின் தசை வரும்பொழுது, லக்னத்திற்கு 6ம் அதிபதி எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார், 6ம் வீட்டில் எந்த கிரகங்கள் அமர்ந்திருக்கிறது, அந்த கிரகங்கள் எந்த ஆதிபத்தியத்திற்கு சொந்தக்காரர்கள், 6ம் வீட்டின் மற்றும் 6ம் அதிபதி நின்ற வீட்டின் சுபத்தன்மை பாவத்தன்மையை பொறுத்து 6ம் வீட்டின் பலன் 6ம் அதிபதியின் தசையில் அமையும். இங்கு சாரம் மிக மிக அவசியம். அதாவது 6ம் அதிபதி மற்றும் 6ம் அதிபதி நின்ற வீடு சுபத்துவமாக இருக்கும் பொழுது சாராம் பெரிதும் பாதிப்பதில்லை என்றாலும் சாரம் கொடுத்தவன் 6ம் வீட்டிலோ அல்லது 8ம் வீட்டிலோ இருக்கும் பொழுது பலன் சிறப்பாக இருக்காது மாறாக கெடுபலனை கொடுக்கும். இது 6ம் அதிபதி அதிக சுபத்துவமாக இருந்தாலும் சரி அல்லது சுபராகி 5, 9ல் நின்றாலும் சரி.

ரிஷப துலாம் லக்னங்களுக்கு சனி யோகர் மற்றும் ராஜ யோகாதிபதி ஆனாலும், லக்ன அவையோகரான குருவிற்கு சனியின் தொடர்பு கிடைக்கும் பொழுது குரு தசை நல்ல பலனை தராது, அது குரு ராசி அதிபதியாகவே இருந்தாலும் சரி..
6ம் பாவகம் மற்றும் 6ம் அதிபதிக்கு பலன் எடுக்க வேண்டும் எனில் 5ம் அதிபதி மற்றும் லக்னத்தையும் சேர்த்து கணிப்பது மிக மிக அவசியம், ஜாதகரின் எண்ணமும் செயலும் புத்தியும் 6ம் அதிபதியை கணிக்க மிக அவசியம்..

கணவன், மனைவி மற்றும் ஒரு குழந்தை ஒரு குடும்பமாகி இருக்க, ஒருவருடைய ஜாதகத்தை மட்டும் வைத்து 6ம் அதிபதியை கணிப்பதும் அவ்வளவு துல்லியமாக வராது. குடும்பத்தில் பிரட் வின்னர் என்று சொல்லப்படும் சம்பாதிக்கும் நபருக்கு நல்ல தசையில் 6ம் அதிபதி புக்தி நடக்கையில், மனைவிக்கு அல்லது குழந்தைக்கு 6, 8ம் அதிபதிகளின் தசா புக்தி நடக்கும்பொழுது கணவரை பாதிக்கும், இதற்கு ஒரு சில ஜோதிடர்கள் இந்த நேரத்தில் குடும்பத்தை விட்டு நீங்க பிரிந்து இருங்கள் என்று பரிகாரமும் கூறுவார்கள். அது அவ்வளவு சிறப்பாக அமையாது அல்லது கிரகங்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, ஏனென்றால் கணவருக்கு ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாகி இருக்கும் பொழுது 5ம் அதிபதி நிலையையும் 7ம் அதிபதி நிலையையும் பொறுத்து சில நிலைகளில் வேறு தொடர்புகளை கொடுக்கும் (இதுவும் 6ம் பாவகத்தின் அமைப்பே) அதன் மூலமாக 6ம் வீட்டின் ஆதிபத்தியம் நடக்க ஆரம்பித்து விடும்.

கணிக்க மிக சிக்கலான பாவகம் 6ம் பாவகம், ஆனால் பாவகத்தின் தன்மைகளையும், லக்னத்தின் தன்மைகளையும், கேந்திர கோணங்களையும், 6ம் அதிபதியின் சுப பாவத்தன்மையையும், 6ம் அதிபதிக்கு வீடு கொடுத்தவனின் நிலைமையும், சாரம் கொடுத்தவன் அமைப்பையும் புரிந்து கொண்டால் 6ம் பாவகத்தை கணிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்..
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

#bhavishyamaarg

Leave a Reply